ADDED : அக் 26, 2025 03:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நுாதன முறையில், 5 பேரிடம் ரூ.5.3 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூலகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆர்.டி.ஓ.இ-சலான் செயலியை மர்ம நபர் ஒருவர் அனுப்பினார். இதனை உண்மை என நம்பி, அந்த நபர் அவரது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விபரங்களையும் பதிவு செய்தார்.
பின், அவருக்கு தெரியாமல் மர்ம நபர், அவரது பெயரில் ஆன்லைனின் தனி நபர் கடனாக ரூ. 13 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தில் இருந்து அவருக்கு தெரியாமல் ரூ.4.80 லட்சத்தை மர்மநபர் எடுத்து ஏமாற்றியுள்ளார்.
இதேபோல் முதலியார்பேட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், லோன் செயலியில் கடன் பெற்று திருப்பி கட்டியுள்ளார். ஆனால், மர்ம நபர் கூடுதலாக பணம் கேட்டு, அப்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் மர்ம நபருக்கு 5 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
இதே போல் நைனார்மண்ட பத்தை சேர்ந்த நபர் 10 ஆயிரம், ஆலங்குப்பம் நபர் 4,500, கதிர்காமம் நபர் 3,600 என, மொத்தம் 5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5.3 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

