ADDED : மார் 19, 2026 04:36 AM

திருக்கனுார்: சுத்துக்கேணியில் அனுமதியின்றி பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த54 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கலால் துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி சாராயக்கடையில் அனுமதியின்றி பாக்கெட்டில் சாராயம் அடைத்து வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காட்டேரிக்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், காட்டேரிக்குப்பம், கங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம், 55, என்பவர் சட்டவிரோதமாக சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
அவரிடமிருந்து 100 மி.லிட்டர் அளவிலான 94 பாக்கெட், 180 மி.லிட்டர் அளவிலான 250 பாக்கெட் என மொத்தம் ரூ. 9 ஆயிரத்து 380 மதிப்பிலான 54.400 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறுமுகம் மற்றும் சாராயத்தை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.
