ADDED : மார் 05, 2026 04:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2.48 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த பெண்ணை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தன்னை போலீஸ் அதிகாரி போல் அறிமுகப்படுத்தி கொண்டார். பின், அப்பெண் சென்னை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை சேர்ந்தவர் எனக் கூறி மிரட்டியதுடன், வீட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு நபர், தன்னை வழக்கறிஞர் போல் அறிமுகப்படுத்தி, வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். அதை நம்பிய அப்பெண் மர்ம நபர்களுக்கு ரூ. 76 ஆயிரத்து 545 அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 50 ஆயிரத்து 115, ரெட்டியார்பாளைத்தை சேர்ந்தவர் 26 ஆயிரத்து 660, கரிகலாம்பாக்கத்தை சேர்ந்தவர் 18 ஆயிரம், வி.மணவெளியை சேர்ந்தவர் 72 ஆயிரம், கோரிக்மேட்டை சேர்ந்தவர் 5 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 48 ஆயிரத்து 320 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
