கொள்ளை அடிக்க ஆயுதங்களுடன் பதுங்கிய 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
கொள்ளை அடிக்க ஆயுதங்களுடன் பதுங்கிய 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
ADDED : ஜூலை 13, 2026 02:46 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம், ப ம்ப் ஹவுஸ் அருகே கொள்ளை அடிக்க கத்தியுடன் பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம், சண்முகா நகர் பம்ப் ஹவுஸ் அருகே ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, போலீசாரை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் விரட்டி பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கத்திகள், குரங்கு முகமூடிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கோபாலன்கடை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோக் மகன் சரண்ராஜ்,27; மேட்டுப்பாளையம், சோனியா காந்தி நகர், காமராஜர் வீதி ஷாகுல் அமீத் மகன் சதாம் உசைன், 19; புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு இளங்கோ மகன் இளஞ்செழியன், 19; சாரம், லட்சமி நகர் ஆசாத் மகன் முகமது கைப், 19; மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் கருவடிக்குப்பம் பம்ப் ஹவுஸ் வழியாக செல்லும் தொழிலதிபர்கள், வணிகர்களை வழிமறித்து, கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 பைக்குகள், 1 ஸ்கூட்டர், 4 கத்திகள், 6 குரங்கு முகமூடிகள், 3 மொபைல்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்டபல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
6 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 4 பேரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவர்கள் 2 பேரையும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
