பொது இடங்களில் நிறுத்தப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல்
பொது இடங்களில் நிறுத்தப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல்
ADDED : செப் 16, 2026 11:23 PM
புதுச்சேரி: பொது இடங்களில் நிறுத்தி 8 வாகனங்களை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட கனரக, இலகுரக, இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் கலவை இயந்திரங்கள் பொதுச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குக்கு இடையூறாக உள்ளன.
இதனால் குப்பை தேக்கம், கொசு உற்பத்தி, தொற்று நோய்கள் பரவல் அபாயம் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. இவ்வாகனங்கள் மற்றும் உபகரணங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிக்கொள்ளுமாறு செய்தித்தாள்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் அகற்றி தங்களது சொந்த இடங்களில் நிறுத்திக்கொள்ளுமாறும், காலக்கெடுவிற்குள் அகற்றப்படாத வாகனங்கள் புதுச்சேரி நகராட்சி விதிகளின்படி, எந்தவித முன்னறிவிப்புமின்றி அப்புறப்படுத்தப்பட்டு, பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என, அறிவிப்பு நோட்டீஸ்கள் உழவர்கரை நகராட்சி மூலம் வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ஒட்டப்பட்டது.
இருப்பினும், பல இடங்களில் இவைகள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, பொதுமக்கள், மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சுகாதார நலன் கருதி கைவிடப்பட்ட கார், ஆட்டோ உள்ளிட்ட 8 வாகனங்களை உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு மேற்பார்வையில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
வாகன உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்க்குள் உழவர்கரை நகராட்சி ஆணையரை அணுகி அபராத தொகையை செலுத்தி பொது இடங்களில் வாகனத்தை நிறுத்த மாட்டேன் என, உறுதி அளித்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். தவறும் பட்சதில் வாகனங்கள் சட்ட விதிகளின்படி ஏலம் விடப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
