/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 82 தொழிற்சாலைகள் மூடல்
/
புதுச்சேரியில் 82 தொழிற்சாலைகள் மூடல்
ADDED : மார் 28, 2025 05:24 AM
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;
கல்யாணசுந்தரம்(பா.ஜ): நம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கூட தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. அதற்கான காரணம் என்ன. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர அரசுக்கு உத்தேசம் உள்ளதா.
அமைச்சர் நமச்சிவாயம்: பல்வேறு காரணங்களால் புதுச்சேரியில் 82 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய தொழில்களை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது.
கல்யாணசுந்தரம் (பா.ஜ): புதிய தொழில் கொள்கை கொண்டு வர அரசுக்கு எண்ணம் உள்ளதா.
அமைச்சர் நமச்சிவாயம்: கடந்த 2016ல் தொழில் கொள்கை கொண்டு வரப்பட்டது. புதிய கொள்கை கொண்டு வர அரசுக்கு எண்ணம் உள்ளது.
புதுச்சேரியில் தொழிற்பேட்டைக்கு ஏற்ற பெரிய இடங்கள் இல்லை. இருப்பினும் தற்போதுள்ள தொழில் கொள்கையிலும் போதுமான சலுகைகள் உள்ளன.
ஆனால் இடம் தான் பற்றாக்குறையாக உள்ளது. சேதராப்பட்டை தவிர்த்து மற்ற இடங்களில் தொழிற்சாலை ஆரம்பிக்க நிலம் கொடுக்க கூடிய சூழல் இல்லை. தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் மட்டும் 40 இடங்கள் காலியாக உள்ளது. தொழிற்பேட்டைகளில் இடம் ஒதுக்கியும் தொழிற்சாலை ஆரம்பிக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். 3 மாதத்திற்குள் தொழில் துவங்கவில்லையெனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட அனுமதியை கேன்சல் செய்தும் வருகிறோம்.
கல்யாணசுந்தரம்: பிப்டிக்கில் ஒரு மாதிரியும், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் வேறு மாதிரியும் சட்டம் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை தொழில் துறைக்கு சொந்தமான இடம். அந்த இடத்தை பிப்டிக்கு மாற்ற ஏற்றுக்கொள்ளவில்லை.
கல்யாணசுந்தரம்: அங்கு பல தொழிற்சாலை மூடி உள்ளன. அவர்கள் தொழிற்சாலையை மற்றவர்களுக்கு விற்க நினைத்தாலும் விற்க முடியவில்லை. யாருக்கும் பெயர் மாற்றம் செய்யவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: அங்கு ரியல் எஸ்டேட் தான் நடக்கிறது. அதனால் என்.ஓ.சி., கொடுக்க அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் ஒரு கூட்டம் போட்டு என்.ஓ.சி., கொடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.