2 தொகுதிகளுக்கு ஒரு ஐ.ஏ.எஸ்., நேரு எம்.எல்.ஏ., யோசனை
2 தொகுதிகளுக்கு ஒரு ஐ.ஏ.எஸ்., நேரு எம்.எல்.ஏ., யோசனை
ADDED : ஆக 29, 2026 11:43 PM
நேரு படம்
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின் போது நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர். கலெக்டரை தவிர்த்து, முதல்வர் மற்றும் ஒவ்வொரு அமைச்சரின் இலாகாவிற்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி செயலராக இருந்தால் மட்டுமே போதுமானது.
அக்கறையின்மை காரணமாக மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் புதுச்சேரிக்கு கொண்டு வருவதில் அதிகாரின் பங்கு போதிய அளவில் இல்லை. ஐ.ஏ.எஸ்., செயலர்கள் தங்களுடைய துறை சார்ந்த கோப்புகளைப் பார்த்து ஆய்வு செய்வதுடன் மட்டும் தங்கள் பணிகளை முடித்துக் கொள்ளக் கூடாது. நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக, 2024ம் ஆண்டு பெய்த அதிகனமழையால் புதுச்சேரி வெள்ளக்காடான போது கூட, எந்தவொரு துறை செயலரும் களத்திற்கு வந்து நிவாரணப் பணிகளைச் செய்யவில்லை. அண்டை மாநிலங்களில் துறை செயலர்கள் தெருத்தெருவாகச் சென்று ஆய்வு செய்தனர். பணியில் இருக்கும் 15-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு அதிகாரி வீதம் நியமித்து நேரடியாகக் களப்பணியாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
