/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல்வாதிகளுக்கு பேனர் வைத்தால் கண்டுகொள்ளாத கலெக்டர்; கல்யாண கோஷ்டிகள் சென்டர் மீடியன்களில் அட்டூழியம்
/
அரசியல்வாதிகளுக்கு பேனர் வைத்தால் கண்டுகொள்ளாத கலெக்டர்; கல்யாண கோஷ்டிகள் சென்டர் மீடியன்களில் அட்டூழியம்
அரசியல்வாதிகளுக்கு பேனர் வைத்தால் கண்டுகொள்ளாத கலெக்டர்; கல்யாண கோஷ்டிகள் சென்டர் மீடியன்களில் அட்டூழியம்
அரசியல்வாதிகளுக்கு பேனர் வைத்தால் கண்டுகொள்ளாத கலெக்டர்; கல்யாண கோஷ்டிகள் சென்டர் மீடியன்களில் அட்டூழியம்
UPDATED : செப் 17, 2024 02:03 PM
ADDED : செப் 17, 2024 05:05 AM

புதுச்சேரி : ஆளும் கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு பேனர் வைத்தால் கலெக்டர் அப்புறப்படுத்த மாட்டாரா என்பதே பொதுமக்களின் சுளீர் கேள்வியாக உள்ளது.
கோர்ட் நேரடியாக தலையிட்ட பிறகு, புதுச்சேரியில் சாலையில் பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் வேறு வடிவில் சாலையில் டிஜிட்டல் பேனர்கள் இப்போது மீண்டும் முளைத்து வருகின்றன.
திருமண வாழ்த்து என்ற பெயரில் கல்யாண கோஷ்டிகள் சாலையில் இப்போது அட்டூழியம் செய்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் சாலையில் கண்டமேனிக்கு சென்டர் மீடியனை ஆக்கிரமித்து கல்யாண கோஷ்டிகள் சட்ட விரோதமாக பேனர்களை வைத்து வருகின்றன.
குறிப்பாக, இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அவுஸ் ஏர்போர்ட் சாலை சந்திப்பில் இருந்து கொக்குபார்க் வரை, ஆளும் கட்சியினர், அரசியல் பிரமுகர்களை வரவேற்று சென்டர் மீடியன் செடிகளை குழி தோண்டி புதைத்து அனுமதி இல்லாமல் சட்ட விரோத பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த பேனர்களின் சம்பந்தப்பட்ட நகராட்சி, நெடுஞ்சாலையிடம் அனுமதி பெற்றதற்கான எந்த ஆணை ஒட்டப்பட வில்லை. எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது என்ற தகவலும் இடம் பெறவில்லை. மொட்டையாக சட்ட விரோதமாக யார் எடுக்க போகின்றனர் என்று துணிச்சலாக வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட, இந்த சட்ட விரோத பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
சட்ட விரோத பேனர்கள் மீது கையை வைக்க அதிகாரிகளுக்கு துணிச்சல் இல்லையா...
சாமனியர்கள் வைத்த பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்போது, ஆளும் கட்சியினர், அரசியல் வாதிகளுக்கு பேனர் வைத்தால் மாவட்ட கலெக்டர் அப்புறப்படுத்த மாட்டாரா என்பதே பொது மக்களின் 'சுளீர்' கேள்வியாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க இ.சி.ஆர்., சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அவ்வப்போது சென்று வருகின்றார்.
இதேபோல் இ.சி.ஆர்., வழியாக தான் நகராட்சி, நெடுஞ்சாலை அதிகாரிகளும் தங்களுடைய அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்புகின்றனர்.
அப்படி இருக்கும்போது, இந்த கல்யாண கோஷ்டிகள் சட்ட விரோத பேனர்களை, சாலையில் வைத்துள்ளது, அவர்களின் கண்ணுக்கு தெரியாதா.
ஆளும் கட்சியினர், அரசியல்வாதிகளை குஷிப்படுத்த கல்யாண கோஷ்டிகள் பேனர் வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்காமல் சாமரம் வீச வேண்டுமா.. இது தான் பேனர் தடுக்கும் லட்சணமா.... பொதுமக்கள் கைகொட்டி சிரிக்க மாட்டர்களா... சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதானே..அப்படி இருக்கும்போது கல்யாண கோஷ்டிகள் சட்ட விரோதமாக பேனர் வைப்பதை மட்டும் கண்டுகாணாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்...
கல்யாண கோஷ்டிகளின் சட்ட விரோத பேனர்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அடுத்து, ஒவ்வொருவராக மீண்டும் சாலையில் பேனர்களை வைக்க கிளம்பி விடுவர். அடுத்த மாவட்ட கலெக்டரின் பேனர் தடுப்பு உத்தரவுகள் காற்றில் தான் பறக்கும். இந்த கல்யாண கோஷ்டிகளின் சட்ட விரோத பேனர்கள் விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனிடம் உறுதியான அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

