புதுச்சேரியின் நெல் களஞ்சியத்தில் பாழடைந்து கிடக்கும் வேளாண் வளாகம்
புதுச்சேரியின் நெல் களஞ்சியத்தில் பாழடைந்து கிடக்கும் வேளாண் வளாகம்
ADDED : ஜூலை 19, 2026 06:36 AM

பாகூர்: பாகூரில் உள்ள இணை வேளாண் இயக்குனர் அலுவலக கட்டடம் பாழடைந்து, விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளதால், அங்கு செல்லும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
புதுச்சேரியின் பாகூர் பகுதியில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் மொத்த நெல் உற்பத்தியில் பாகூருக்கு முக்கிய பங்குண்டு.
இதனால், புதுச்சேரியின் நெல் களஞ்சியமாக பாகூர் வேளாண் கோட்டம் திகழ்ந்து வருகிறது.
விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் மேம்பாட்டு திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்திடும் வகையில், கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பாகூரில் இணை வேளாண் இயக்குனர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வேளாண் வளாகத்தில், விதை நெல் நேர்த்தி நிலையம், கரும்பு விதை கரணை வெப்ப நீராவி சிகிச்சை பிரிவும் இயங்கி வந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவை செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் வசதிக்காக, டிராக்டர், ஏர் கலப்பை, அறுவடை இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
அந்த இயந்திரங்கள் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் நிலை தற்போது தெரியவில்லை. மேலும், இந்த அலுவலகம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பாழடைந்த நிலையில் உள்ளது.
தரையில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் பெயர்ந்து, அங்கு செல்லும் விவசாயிகளின் கால்களை அறுத்து பதம் பார்த்து விடுகிறது.
இந்நிலையில், அங்கு செயல்பட்டு வரும் உழவர் உதவியகத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு தக்கை பூண்டு விதை வாங்க சென்ற விவசாயி, பெயர்ந்துள்ள டைல்ஸ் தரையால், காலில் வெட்டு காயம் ஏற்பட்டது.
மேலும், இந்த அலுவலகம் பாழடைந்து புதர் மண்டி, விஷ பூச்சிகளின் வளாகமாக மாறியுள்ளது. புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூரில் வேளாண் வளாகம் பாழடைந்து கிடக்கிறது.
இந்தச் சீர்கேடுகளுக்கு முக்கியக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமே. அதிகாரிகளே வராததால் இந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
