தலைமைச் செயலகம் எதிரே கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
தலைமைச் செயலகம் எதிரே கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
UPDATED : செப் 08, 2026 04:50 PM
ADDED : செப் 08, 2026 04:42 PM

புதுச்சேரி: தலைமை செயலகம் எதிரே கடலில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரையில், உருளை வடிவிலான மர்ம பொருள் ஒன்று நேற்று முன்தினம் மாலை கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இதை கண்ட பொது மக்கள் மாநில கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உத்தரவின் பேரில், கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மர்ம பொருளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், கரையொதுங்கிய பொருள் பிளாஸ்டிக் டிரம் போன்றும், அதன் இருபுறமும் பாதுகாப்புக்காக இரும்புப் பட்டைகள் மற்றும் வளையங்களால் வெல்டிங் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அதன் ஒருபகுதியில் சிறிய துளை (ஓட்டை) இருப்பதும் தெரியவந்தது.
அந்தப் பொருளின் உள்ளே ஏதேனும் உள்ளனவா அல்லது கப்பல்களிலிருந்து தவறி விழுந்த மிதவையா என்பது குறித்துக் கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த பொருளை திறத்து உள்ளே என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்ய மாநில கடலோர காவல் படையினர், இந்திய கடலோர காவல் படை மற்றும் சுற்றுலாத்துறையின் தொழில்நுட்ப குழுவினருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், மர்ம பொருள் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், தொழில்நுட்ப குழுவினரின் ஆய்வுக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடலில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
