/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறகுபந்து உலகில் ஜொலிக்கும் புதுச்சேரி நட்சத்திரம்
/
இறகுபந்து உலகில் ஜொலிக்கும் புதுச்சேரி நட்சத்திரம்
இறகுபந்து உலகில் ஜொலிக்கும் புதுச்சேரி நட்சத்திரம்
இறகுபந்து உலகில் ஜொலிக்கும் புதுச்சேரி நட்சத்திரம்
ADDED : டிச 18, 2025 05:23 AM

புதுச்சேரி: அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை இறகுபந்து போட்டிகளில், இரட்டையர் பிரிவில் இந்திய அணி முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
அணியில் முக்கிய வீரராக விளையாடி, ஒவ்வொரு இறகு பந்தையும் உயிர்ப்புடன் சமாளித்து, இந்தியா வெண்கல பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர் மிதிலேஷ் கிருஷ்ணன்.
18 வயதான மிதிலேஷ் கிருஷ்ணனின் பூர்வீகம் புதுச்சேரி. ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்,49, - ராஜேஸ்வரி,44, தம்பதியரின் மகன்.
6.5 வயதில் இறகு பந்து உலகில் கால்பதித்த இவர், தினசரி கடினப்பயிற்சியால் உயரங்களை தொட்டுள்ளார்.தனது தோளில் இந்தியக் கொடி போர்த்தி, பதக்கம் தொங்கியபடி மேடையில் நின்ற அந்த தருணம்…
அவரது குடும்பத்திற்கும், குழுவினருக்கும், புதுச்சேரிக்கும் பெருமிதத்தை தேடி தந்தது.
மிதிலேஷ் கிருஷ்ணன் கூறுகையில், 'அசாம் கவுஹாத்தியில் நடந்த உலகக்கோப்பை அணிக்கான தேர்வுப்போட்டி தான் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்தது. பல மாநிலங்களில் இருந்து வந்த திறமையான வீரர்களை மிஞ்சியும், இறுதி கட்டம் வரை உறுதியுடன் நின்றும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று இந்திய அணிக்கான இடத்தை கைப்பற்றினேன்.
அந்த தன்னம்பிக்கை உலககோப்பை இறகுபந்து போட்டியிலும் எடுத்து சென்றதால் சாதிக்க முடிந்தது. பயிற்சியாளர் மணிகண்டன் என் திறமையை கண்டுபிடித்து மெருகேற்றினார். இந்த பெருமை அவரையே சாரும். அடுத்து ஒலிம்பிக்கில் சீனியர் பிரிவில் பங்கேற்க வேண்டும் என, பயிற்சியை துவக்கியுள்ளோம்' என்றார்.
இருப்பினும் மிதிலேஷ் கிருஷ்ணனில் குரலில் ஆதங்கமும் வெளிபட்டது. புதுச்சேரியில் இறகுப்பந்து அசோசியேஷன் இல்லாததால், போட்டிகளில் பங்கேற்க, தரவரிசையில் முன்னேற, நிதி உதவி பெறவது; இவையெல்லாம் பெரிய சவாலாக உள்ளது. அசோசியேஷன் பிரச்னை விரைவில் முடிந்தால், என்னைப்போல இன்னும் பல திறமைகள் இந்திய அளவில், உலக அளவில் புதுச்சேரியில் இருந்து உயர முடியும்' என்றார்.
இன்னும் பல பதக்கங்களை இந்தியாவுக்காகவும், தாயகமான புதுச்சேரிக்காகவும் வென்று காட்ட வேண்டும் என்பது மிதிலேஷ் கிருஷ்ணனின் கனவாக இருக்கிறது. என்னுடைய கனவுகளை நனவாக்க பயிற்சியாளர் சொல்வதனை பின்பற்றுவேன், ஒவ்வொரு வெற்றியும் நம் நாட்டுக்கான பரிசாக இருக்கும், என, உறுதியுடன் கூறுகிறார்.
ஆல் தி பெஸ்ட்- மிதிலேஷ் கிருஷ்ணன்.....

