/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்று அரசியல் சக்தியை உருவாக்க புதுச்சேரியில் மூவர் அணி உதயம்
/
மாற்று அரசியல் சக்தியை உருவாக்க புதுச்சேரியில் மூவர் அணி உதயம்
மாற்று அரசியல் சக்தியை உருவாக்க புதுச்சேரியில் மூவர் அணி உதயம்
மாற்று அரசியல் சக்தியை உருவாக்க புதுச்சேரியில் மூவர் அணி உதயம்
ADDED : டிச 07, 2024 07:32 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்குவதற்காக மூவர் அணி உதயமாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு ஒரு ஆண்டே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் காய் நகர்தல்களை துவங்கி விட்டன. கட்சி நிர்வாகிகளை நியமித்து, வார்டு ரீதியாக பலப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கொள்கை ரீதியாக எதிரும் புதிருமாக உள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க., சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்து, அரசியல் மாற்று சக்தி குறித்து ஆலோசனை நடத்தினர்.
நீண்ட நேரம் விவாதித்த மூவரும் மக்கள் பிரச்னையில் ஒரே அணியாக செயல்பட முடிவு செய்தனர். கட்சிக்கு அப்பாற்பட்டு, மக்கள் பிரச்னையில் ஒரே அணியில் திரண்டு, மாற்று சக்தியாக உருவெடுப்பது குறித்தும் விவாதித்தனர்.
பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, தாமரை இலையும் தண்ணீரும் இருப்பது போல் பா.ஜ.,வுடன் ஒட்டாமலே இருந்து வருகிறார். கட்சி சாயம் இல்லாமல் அறக்கட்டளை வாயிலாக மட்டுமே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதேபோல், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., ஆதரவு நிலையில் இருந்தபோது கூட அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் முதல்வரையும், அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை; ஆனால் என்.ஆர்.காங்.,கிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நேரு எம்.எல்.ஏ.,வும் கடந்த சில மாதமாக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மக்களுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றார்.
இவர்கள் மூன்று பேரும் ஒரே நேர்கோட்டில் மாற்று அரசியலை முன்னெடுக்க ஆலோசித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.