ADDED : செப் 24, 2024 12:13 AM

திருக்கனுார் : வம்புப்பட்டில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது நிலை தடுமாறி வயல்வெளியில் கவிழ்ந்த கார் விபத்தில் 2 பேர் உயிர் தப்பினர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு தனது காரில் திருக்கனுார் சென்றுவிட்டு, வம்புப்பட்டு வழியாக மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
வம்புபட்டு மெயின்ரோட்டில் கார் வந்தபோது, குறுகலான சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளார். அதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென அருகிலிருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.
இதில், காரில் பயணம் செய்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதைகண்ட அப்பகுதி இளைஞர்கள் விரைந்து சென்று காரில் உள்ள இருவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான காரை இளைஞர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.