UPDATED : நவ 22, 2026 06:27 PM
ADDED : நவ 22, 2026 06:27 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் மூடப்படாத பள்ளங்களில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மின் கேபிள்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
முத்தியால்பேட்டை பகுதியில் மின்துறை மூலம் புதைவட மின் கேபிள்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சுந்தரவிநாயகர்பேட்டை 2வது தெரு மற்றும் வெள்ளவாரி பிரதான சாலையில் பாதாள மின் கேபிள் அமைக்க ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டது.
ஆனால், மின் கேபிள் அமைக்கும் பணி முழுமையடையாமலும், சாலையோரம் தோண்டப்பட்ட ஆழமான பள்ளங்கள் மூடப்படாமலும், எந்தவித எச்சரிக்கைத் தடுப்புகளும் இல்லாமலும் திறந்த நிலையில் உள்ளன.
இதற்கிடையே, பள்ளங்களுக்குள் செல்லும் மின் கேபிள்கள் தரைக்கு மேல் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதுடன், அவை இணைக்கப்பட்டு இன்சுலேஷன் டேப்கள் சுற்றப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. மேலும், தோண்டப்பட்ட பள்ளங்களைச் சுற்றி மண், கற்கள் மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்துறை அதிகாரிகள் உடனடியாக திறந்த நிலையில் உள்ள கேபிள்களைப் பாதுகாப்பாகச் சீரமைத்து பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
