தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நடிகர் பாண்டி செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நடிகர் பாண்டி செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நடிகர் பாண்டி செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : நவ 27, 2023 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2023 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நடிகர் பாண்டி செல்வம் திருமண நாளை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

புதுச்சேரி பிள்ளைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். லயன்ஸ் கிளப், நடிகர் சங்கம், ஆன்மிக குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், சமுதாயம் சாரல் போன்ற பல சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சில சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளதால், இவரை நடிகர் பாண்டி செல்வம் என்று அழைக்கின்றனர்.

தங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் தலை தெறிக்க ஓடிய கொரோனா காலத்தில், தனது குடும்பமே கொரோனா பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட சூழ்நிலையிலும், எதையும் பொறுப்பெடுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உணவு பொட்டலங்கள் என்று வழங்கியதோடு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் கசாயம் வழங்கினார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையுடன் இணைந்து நடிகர் பார்த்திபன் மற்றும் சில திரைப்படக் கலைஞர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் தயாரித்து வெளியிட்டு பொதுமக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக அப்போதைய முதல்வர் பாண்டி செல்வத்திற்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

தீவிர சிவன் பக்தரான பாண்டி செல்வம் தனது திரையுலக ஆசான் நடிகர் மயில்சாமியுடன் இணைந்து ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் சிவராத்திரி, தீபத்திருநாள் போன்ற விசேஷ நாட்களில் பல்வேறு ஆன்மிக தொண்டுகளையும் செய்து வந்தார்.

சாய்பாபாவின் அன்னதான சேவையோடு கூடிய இறைவழிபாடு முறையால் ஈர்க்கப்பட்டு, சாய்பாபாவின் பக்தராகவும் சேவகனாகவும் செயல்பட, கனவில் தோன்றிய சாய்பாபா, ஆலயத்திற்குள் நுழைந்தால் எந்தவித உரையாடலும் இன்றி அமைதியான முறையில் வழிபாடும், அன்னதானமும் நடந்திடும் வகையில் ஒரு கோவில் அமைத்து செயல்படுத்திட வேண்டும் என்று ஆணையிட, அதையே தனது வாழ்நாளில் இறுதி காலகட்ட லட்சியமாகவும், வாழ்க்கையாகவும் கருதி, தனக்கு சொந்தமான, வில்லியனுார் உத்திரவாகினி பேட் பகுதியில் உள்ள இடத்தில் 'செல்வம் தரும் சாய்பாபா' என்ற கோவில் அமைப்பதற்கான திருப்பணிகளை துவங்கி செய்து வருகிறார்.

தனது எந்த ஒரு செயலிலும் ஆன்மிகமும், பொது சேவையும் இரு கண்களாக பாவித்து வரும் பாண்டி செல்வம் தனது 25ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவையொட்டி, முக்கிய கோவில்களுக்கு சென்று பூஜை செய்து வழிபாட்டார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஏழைப் பெண்களுக்கு இலவச புடவை, அரிசி, பிரியாணி போன்ற நலத்திட்ட உதவிகளை செய்தார்.

பாண்டி செல்வத்தின் திருமண நாளை முன்னிட்டு, சில முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி நடிகர்கள் பன்முக கலைஞர்கள் முன்னேற்ற சங்கம், சமுதாய சாரல் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us