முதல்வர் ரங்கசாமியின் எளிமை :நடிகர் ஒய்.ஜி., மகேந்திரன் வியப்பு
முதல்வர் ரங்கசாமியின் எளிமை :நடிகர் ஒய்.ஜி., மகேந்திரன் வியப்பு
UPDATED : நவ 04, 2026 03:50 PM
ADDED : நவ 04, 2026 03:47 PM

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (நவ.,3) சந்தித்துப் பேசினார்.
பின், அவர், கூறியதாவது:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கு பொதுவான ஒற்றுமை பிணைப்பு உண்டு. இரண்டு பேருமே நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகர்கள். ஏற்கனவே சிவாஜி எக்ஸ்லன்ஸ் விருதினை முதல்வர் ரங்கசாமியிடம் வாங்கியுள்ளேன்.
புதுச்சேரி எனக்கு பிடித்தமான இடம். என்னுடைய மாமா ஜிப்மரில் தான் டாக்டராக இருந்தார். என்னுடைய சின்ன வயது விடுமுறையெல்லாம் இங்கு தான் கழிந்தது. இதனால் புதுச்சேரி அத்துப்படி.
எங்களுடைய பாரத் கலாசார சபாவின் 38-வது மார்கழி இசை திருவிழா வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் தலைமை தாங்க முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அழைப்பு விடுத்தேன்.
ஒரு மாநிலத்தின் முதல்வரை இவ்வளவு எளிமையாகவும், எவ்விதக் கெடுபிடிகளும் இன்றியும் நேரில் சென்று சந்திக்க முடியும் என்பதை என் வாழ்நாளில் முதன்முறையாக இப்போதுதான் காண்கிறேன்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்று சாத்தியமா என்று தெரியவில்லை; அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.
இந்தியாவில் ஜனநாயகம் என்பது உண்மையில் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த எளிமையும் அணுகுமுறையும் நம் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளிடமும் அமைந்தால் இந்தியா உலகிலேயே மிக வலுவான தேசமாக உருவெடுக்கும்' என்றார்.
