தேசிய அளவில் சாதனை படைத்த ஆதித்யா பள்ளி மாணவருக்கு பாராட்டு
தேசிய அளவில் சாதனை படைத்த ஆதித்யா பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 17, 2026 04:19 AM

புதுச்சேரி: ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் மாணவர் தீபக்கை, முதல்வர் பாராட்டினார்.
புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மாணவர் தீபக் 'யுவிகா இளம் விஞ்ஞானி' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு, அவர் உருவாக்கிய செயற்கைக்கோள் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.
இவர், வளிமண்டல மேல் அடுக்கு நிலைகளை ஆய்வு செய்வதற்காக, 150 பிக்கோ செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் கலப்பின ராக்கெட்டை வடிவமைத்து, ஒருங்கிணைத்து ஏவி சாதனை படைத்தார்.
அறிவியல் பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், புதுமையான அறிவியல் திட்டத்தை சமர்ப்பித்ததற்காக மதிப்புமிக்க 'ஊக்கம் விருது' பெற்றுள்ளார்.
யூத் ஐடியதான் 2024 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று, டில்லி ஐ.ஐ.டி.,யில் யோசனையை சமர்ப்பித்தார். இதன் மூலம் இவரது முன்மாதிரி திட்டத்திற்கு ஆறு இலக்க அளவிலான முதலீட்டு ஆதரவு கிடைத்தது. தேசிய அளவிலான கூகுள் மீட் அமர்வில், ஏடிஎல் திட்ட விளக்க காட்சியை வழங்கியதற்காக பாராட்டு சான்றிதழையும் பெற்றார். இந்திய அரசின் 'அடல் இன்னோவேஷன் மிஷன்' அமைப்பின் 'மாணவர் புத்தாக்கத் திட்டம் 8.0' முன்மாதிரி திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அறிவியல், விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என பல துறைகளில் சாதனை படைத்து வரும் மாணவர் தீபக்கை முதல்வர் ரங்கசாமி சால்வை அணிவித்து பாராட்டினார்.
இதில், ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
