ஏனாமில் புயல் பாதித்த பகுதிகளை வேளாண் குழுவினர் ஆய்வு
ஏனாமில் புயல் பாதித்த பகுதிகளை வேளாண் குழுவினர் ஆய்வு
UPDATED : நவ 01, 2026 07:51 PM
ADDED : நவ 01, 2026 07:46 PM

புதுச்சேரி: அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் விவசாய பகுதிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வங்க கடலில் உருவான அர்னாப் புயல் கடந்த 28ம் தேதி அதிகாலை ஆந்திரா, விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதில், ஆந்திரா அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, ஏனாமில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை புதுச்சேரி வேளாண் இயக்குநர் ஜெயசங்கர் தலைமையில், துணை இயக்குநர் சிவசுப்ரமணியன், வேளாண் அலுவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, தரியல்திப்பா, கனகலபேட்டை, பிரான்சிதிப்பா, மெட்டக்கூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
நெற்பயிர்கள், தென்னை மற்றும் வாழைத் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடி, பயிர்ச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களின் சேத விவரங்கள் முறையாகக் கணக்கிடப்பட்டு, விரிவான சேத மதிப்பீட்டு அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், தகுதியான விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
