/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' திட்டம்... ரத்து; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் அமல்
/
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' திட்டம்... ரத்து; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் அமல்
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' திட்டம்... ரத்து; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் அமல்
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' திட்டம்... ரத்து; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் அமல்
ADDED : டிச 25, 2024 07:52 AM
புதுச்சேரி: மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் 5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தில் தொடக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என 741 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் கிடையாது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசின் பாட திட்டமும், மாகியில் கேரள மாநில பாட திட்டமும், ஏனாமில் ஆந்திரா மாநில பாட திட்டங்களை பின்பற்றி வந்தது.
கடந்த ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுதும் (புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம்) அரசு பள்ளிகள் அனைத்திலும் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தியது. இதில், குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையை கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கொரோனா பரவல் முன்பு இருந்தே 'ஆல் பாஸ்' அளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தில் திடீர் மாற்றம் செய்தது. 'ஆல் பாஸ்' அளிக்கும் திட்டத்தை ரத்து செய்து நேற்று முன்தினம் புதிய அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும். 2 மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும் அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் தொடர்ந்து அதே வகுப்பில் பயில வேண்டும் உள்ளிட்ட பல திருத்தங்களை வெளியிட்டது.
மேலும், கல்வி மாநிலங்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால் 'ஆல் பாஸ்' நடைமுறை பின்பற்றுவது, கைவிடுவதும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மத்திய கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி இருப்பதால் மத்திய அரசு எத்தகைய உத்தரவு பிறப்பிக்கிறோ அந்த உத்தரவு புதுச்சேரி மாநில அரசும் ஏற்று செயல்படுத்தும்.
தமிழகத்தில் தனி கல்வி வாரியம் உள்ளது. புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பின்பற்றுவதால், மத்திய கல்வி திட்டத்தில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்கும் பொருந்தும்.
இதனால் பள்ளியில் மாணவர்கள் இடை நிறுத்தம் இருக்காது.
கல்வித்துறை முடிவை புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும். சி.பி.எஸ்.இ., பாட திட்டம், தமிழக மாநில படதிட்டம் பின்பற்றினாலும் கல்வித்துறை உத்தரவுபடி அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்' என்றார்.

