ADDED : ஆக 26, 2026 08:32 PM
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அம்மச்சி அம்மன் குளம் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஏம்பலம் – கம்பளிகாரான்குப்பம் வயல்வெளி சாலை பகுதியில் அம்மச்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பு மற்றும் குளம் இருந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் குளம் மற்றும் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து பயிரிட்டு வந்தார். இதனால் நீர் ஆதாரமாக விளங்கிய குளம் தற்போது மழைநீர் சேமிக்க முடியாத நிலைக்கு மாறியது.
கோவில் குளம் மற்றும் நிலத்தை மீட்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த அம்மச்சி அம்மன் கோவில் நிலம் மற்றும் குளத்தை மீட்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொகுதி எம்.எல்.ஏ., மோகன்தாஸ் சம்மந்தப்பட்ட கோவில் நிலம், குளத்தை பார்வையிட்டு, அளவீடு செய்து பாதுகாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நிலம் மற்றும் குளத்தை அளவீடு செய்து இரும்புகம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர், சம்பவ இடத்துக்கு வந்து, திடீரென உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்த மங்கலம், கரிக்கலாம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
