UPDATED : நவ 26, 2026 08:46 PM
ADDED : நவ 26, 2026 08:46 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்,43; பஞ்காவ்ய விளக்கு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு நண்பர்கள் மூலம் சென்னை சேர்ந்த ரபீக் என்பவர் பழக்கமானார். ரபீக் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, 3 மணி நேரத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பிய வெங்கடேஷ், ரூ.2 கோடி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஆனால் குறித்த நேரத்தில், பணம் இரட்டிபாக்கி தராமல், ரூ.88 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. அவர்கள் உருளையன்பேட்டையை சேர்ந்த தம்பதியை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை நங்கநல்லுாரை சேர்ந்த சதீஷ்,47; என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.
