/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.66 லட்சம் மோசடி; யு.டி.சி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு
/
பெண் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.66 லட்சம் மோசடி; யு.டி.சி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு
பெண் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.66 லட்சம் மோசடி; யு.டி.சி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு
பெண் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.66 லட்சம் மோசடி; யு.டி.சி., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஏப் 07, 2025 06:20 AM

புதுச்சேரி; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் பெண் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய டிபாசிட் பணம் 66 லட்சத்தை மோசடி செய்த யு.டி.சி., மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் கடந்த 2003 முதல் 2021ம் ஆண்டு வரை யு.டி.சி.,யான சுவாமிநாதன் கேஷியராக பணியாற்றினார். இவர் கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சித் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவரது பணியிடத்திற்கு வந்தவரிடம், சுவாமிநாதன் கணக்குகளை சரியாக ஒப்படைக்காமல், காலம் கடத்தி வந்தார். சந்தேகமடைந்த துறை அதிகாரிகள், சுவாமிநாதன் பணியாற்றிய போது, மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட உதவித்தொகை கணக்குகளை சரிபார்த்தனர். துறையின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 20 ஆயிரம் ரூபாய், 2 பெண் குழந்தைகள் பிறந்தால் 30 ஆயிரம் ரூபாய் குழந்தைகளின் பெயரில் அரசு மூலம் வங்கியில் டிபாசிட் செலுத்தி, 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திட்டத்தில் பல லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. துறையின் நலத்திட்ட உதவித் தொகை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருப்பதும்தெரியவந்தது.
இதையடுத்து, உள்ளாட்சித்துறை இயக்குனர் அனுமதியுடன் சுவாமிநாதனிடம் விசாரணை நடத்தியதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் கேஷியராக பணியாற்றியபோது, பெண் குழந்தைகள் பெயரில் பணத்தைடிபாசிட் செய்யாமல், 66 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டார்.
பின், 2023ம் ஆண்டு மோசடியில் ஈடுபட்ட பணத்தில் 27 லட்சம் ரூபாயை 140 குழந்தைகளின் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்தார். ஆனால், மீதமுள்ள 39 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் சுவாமிநாதன் மீண்டும் செலுத்தவில்லை.
இதுகுறித்து, துறை அதிகாரிகள் பலமுறை கேட்டும் பணத்தை வழங்காததால்,துறை இயக்குனர் முத்து மீனா, புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தலைமை செயலர் அனுமதி பெற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் யு.டி.சி., சுவாமிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

