UPDATED : நவ 13, 2026 07:27 PM
ADDED : நவ 13, 2026 07:27 PM

புதுச்சேரி: தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த 58 தீயணைப்பு வீரர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த காலங்களில் உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் வேறு துறைப் பணியிடங்களுக்குத் தேர்வானதால், அவர்கள் தங்களது தீயணைப்புத் துறை பணியிடங்களை ராஜினாமா செய்தனர்.
இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த அடுத்த 3 தகுதியான இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
அமைச்சர் நமச்சிவாயம், அரசுச் செயலர், சார்புச் செயலர், கோட்டத் தீயணைப்பு அதிகாரி மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
