பொழுதுபோக்கு இடங்களில் அலைமோதும் கூட்டம் புதுச்சேரியில் புதிய பூங்காக்கள் மலருமா....
பொழுதுபோக்கு இடங்களில் அலைமோதும் கூட்டம் புதுச்சேரியில் புதிய பூங்காக்கள் மலருமா....
ADDED : ஆக 19, 2026 05:01 PM
புதுச்சேரி மாலை நேரங்களுக்கு ஒரு தனி மயக்கம் உண்டு. அலைகள் கரையைத் தொட்டுச் செல்லும் பாறைக்கடற்கரையின் உப்பு காற்றாகட்டும்... பாரதி பூங்காவின் பழமை வாய்ந்த மரங்களின் நிழலாகட்டும்... தாவரவியல் பூங்காவின் பசுமையாகட்டும்... புதுச்சேரி மக்களின் மாலை நேரச் சரணாலயங்கள் இவை மட்டுமே..
ஆனால், நாள்தோறும் வேலைப் பளுவை மறந்து, கொஞ்சம் காற்றாட நடைப்பயிற்சி செய்யவோ, வார இறுதியில் குடும்பத்தோடு குதுாகலிக்கவோ நினைக்கும் புதுச்சேரி மக்களுக்கு, கைவிரல் எண்ணக்கூடிய அளவிலேயே இடங்கள் இருக்கின்றன. இதனால், மாலை வேளைகளில் இந்த விரல்விட்டு எண்ணக்கூடிய பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழா போலக் கூடும் இந்த நெரிசலில், அமைதியைத் தேடி வரும் பொதுமக்கள் நிம்மதியான ஒரு பொழுதைக் கழிக்க முடியாமல் திணறுகின்றனர்.
நகரமயமாக்கலும், பெருகிவரும் மக்கள் தொகையும் புதுச்சேரியை அதிவேகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு ஏற்ப, நகரத்திற்குப் புதிய மூச்சுக்காற்றைத் தரும் பசுமைச் சோலைகளை உருவாக்க வேண்டியது அவசர அவசியமாக உருவெடுத்துள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் அருகிலேயே பாதுகாப்பான, சுற்றிலும் பூத்துக் குலுங்கும் அழகிய பூங்காக்கள் அமையுமானால் பொதுமக்கள் நீண்டதுாரம் பயணிக்கத் தேவையில்லை. தங்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் நலனைப் பேண முடியும்.
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடி மகிழவும், முதியவர்கள் மாலை நேரத்தில் சுற்றத்தாரோடு உரையாடவும் ஒரு அருமையான சூழல் உருவாகும். இதற்கு உள்ளாட்சித் துறை உடனடிச் செயல் திட்டத்தில் இறங்க வேண்டும். புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி மற்றும் கொம்பயூன் பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்து, நகரின் மூலைமுடுக்கெல்லாம் பயன்பாடின்றி இருக்கும் காலியிடங்களைக் கண்டறிய வேண்டும்.
வெறும் கான்கிரீட் காடுகளாக மாறிவரும் புதுச்சேரியை, ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் பூங்காக்களால் சிங்காரித்து, மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உள்ளாட்சித் துறை மனம் வைத்தால், புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய பூங்காக்கள் மலர்வது நிச்சயம்..
