/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் புதிய பாலம் 24ம் தேதி திறக்க முடிவு
/
ஆரியப்பாளையம் புதிய பாலம் 24ம் தேதி திறக்க முடிவு
ADDED : அக் 22, 2024 05:43 AM

வில்லியனுார்: ஆரியப்பாளையம், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் இறுதிகட்ட பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த குறுகிய பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய பாலம் அமைக்கவும், எம்.என்.குப்பம் முதல் புதுச்சேரி இந்திரா சதுக்கம் வரை சாலையை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ. 64 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதையடுத்து, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி, 2022ம் ஆண்டு பிப்., 11ம் தேதி துவங்கியது.
முதற்கட்டமாக இந்திரா சதுக்கம் முதல் எம்.என் குப்பம் வரையில் சாலையை அகலப்படுத்தி, இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் 360 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் கட்டுமான பணி துவங்கியது. அதில், 18 பில்லர்கள் (துாண்கள்) அமைத்து அதன் மீது பீம்கள் மூலம் சாலை வசதி ஏற்படுத்தி உள்ளனர். பாலத்தின் இருபுறமும், நடைபாதை மற்றும் எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாலப் பணிகள் முடிந்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக சோதனை ஓட்டமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதில், பாலத்தின் இணைப்பு சாலை பகுதியில் மேடு, பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.
அதையடுத்து, நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் முன்னிலையில், நேற்று பாலத்தின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இப்பணி இன்று மாலை நிறைவு பெறும் எனவும், வரும் 24ம் தேதி முதல் பாலத்தை போக்குவரத்திற்கு திறந்து விட அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.