ADDED : பிப் 11, 2025 06:46 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் மதுக்கடை கதவை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள தனியார் மதுபான கடை கதவை, கடந்த 4ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து, கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச்சென்றனர்.
கடை காசாளர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுக்கடை அருகில் உள்ள சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்ததில், ஒருவர் கையில் பையுடன் நடந்து சென்றது பதிவாகி இருந்தது.
விசாரணையில், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மனோகர், 62; மதுக்கடையில் பணம் திருடியது தெரியவந்தது.
கடந்த 2010 முதல் 2013ம் ஆண்டு வரை புதுச்சேரியில் 5 இடங்களில் திருட்டில் ஈடுபட்டு கைதான மனோகர், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி, திருக்காட்டுபுலியூர் மெயின்ரோட்டில் குடியிருந்து வந்துள்ளார். அங்கிருந்த மனோகரை, புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்து 570 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மனோகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

