ஏ.எஸ்.ஐ.,க்கு கத்தி குத்து புதுச்சேரியில் பரபரப்பு
ஏ.எஸ்.ஐ.,க்கு கத்தி குத்து புதுச்சேரியில் பரபரப்பு
ADDED : ஏப் 22, 2026 06:44 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய யாசகரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில், நேற்று காலை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன்,40; தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய யாசகர் ஒருவர், நடைபாதையில் அசுத்தம் செய்தார்.
அதனைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரை கண்டித்து ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேற்றினர். அதே நபர், மதியம் 1 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்தார். அவரை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளே விட மறுத்தார். அதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த யாசகர், தன் பையில் வைத்திருந்த பேனா கத்தியால், உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன், இடது கையில் குத்தி கிழித்தார். இதில், நரம்பு துண்டாகி ரத்தம் பீய்ச்சி அடித்தது. அதனைக் கண்ட பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
உடன் அங்கிருந்த சக ரயில்வே பாதுகாப்பு படையினர் ஓடி வந்து, தப்பியோட முயன்ற யாசகரை மடக்கி பிடித்து, ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட யாசகரை, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் தஞ்சாவூரை சேர்ந்த தண்டபானி மகன் மணிகண்டன்,46; என்பதும், யாசகரான இவர் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து ரயிலில் புதுச்சேரிக்கு வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு, மணிகண்டனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
