கூடுதல் செலவிற்கு ஒப்புதல்
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், சில நேரங்களில் அரசுக்கு கூடுதலாக செலவு ஆகும். சில நேரங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை விட குறைவாகவும் செலவாகும். அதன்படி கடந்தாண்டு பட்ஜெட்டினை காட்டிலும் 948 கோடியே 6 லட்சத்து 59 ஆயிரம் கூடுதல் செலவானது. இந்த 2023-24ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினத்திற்கு சட்டசபையில் முன் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுவை சட்டசபை நேற்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபையில் முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டசபையில் சட்ட திருத்த மசோதாக்களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து காலை 10.55 மணிக்கு சட்டசபையின் அனைத்து அலுவல்களும் முடிவடைந்தது.
சபாநாயகர் செல்வம், புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். ஒட்டுமொத்தமாக சபை நிகழ்வுகள் ஒரு மணி நேரம் 10 நிமிடத்தில் முடிவடைந்தது.
சந்திரபிரியங்கா இருக்கை மாற்றம்
போக்குவரத்து அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா ஆளும் கட்சி வரிசையில் 5-வது இடத்தில் இடம் பெற்றிருந்தார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ரங்கசாமி நீக்கினார்.
சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரின் இருக்கை சட்டசபையில் மாற்றப்பட்டது.
தற்போது 5-வது இருக்கையில் அமைச்சர் சாய் சரவணன்குமார், 6 வது இருக்கையில் ஜான்குமார், 7 வது இருக்கையில் அரசு கொறடா ஆறுமுகம் இடம் பெற்றுள்ளனர்.
அதை தொடர்ந்து 8 வது இருக்கையில் சந்திரபிரியங்கா இடம் பெற்றுள்ளார். இருப்பினும் நேற்றைய சட்டசபை நிகழ்வில் சந்திரபிரியங்கா பங்கேற்கவில்லை.