/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவு வரை நீடித்த சட்டசபை கூட்டம்
/
நள்ளிரவு வரை நீடித்த சட்டசபை கூட்டம்
ADDED : மார் 22, 2025 03:30 AM

புதுச்சேரி: நள்ளிரவு வரை நீடித்த சட்டசபையால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 10ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்கியது. தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
எம்.எல்.ஏ.,க்களின் கேள்விக்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளித்தனர்.
பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏக்களின் விவாதம் அனல் பறந்தது.
நேற்றைய ஒன்பதாம் நாள் கூட்டத் தொடர் காலை 9:30 மணி துவங்கியபோது இன்று 21 ம்தேதி அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பேச வேண்டும். எனவே மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
அதை தொடர்ந்து 2:20 மணி வரை நடந்த கூட்டத் தொடரில், எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.சிவா, ஜான்குமார், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், அங்காளன் பேசினர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய கூட்ட தொடர் இரவு 10:40 மணி வரை நீடித்தது.
எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், பிரகாஷ்குமார், சிவசங்கர், ராமலிங்கம், லட்சுமிகாந்தன், ரிச்சர்டு என எம்.எல்.ஏ.,க்கள் மக்களின் கோரிக்கை முன் வைத்து பேசினர்.
முதல்வர் ரங்கசாமி இரவு 8:52 மணியளவில் புறப்பட்டு சென்றார். இன்று 22ம் தேதி, நாளை 23ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் இல்லை. 24ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே சட்டசபை நடக்க உள்ளது. இதில் 27ம் தேதியை தவிர்த்து மற்ற மூன்று நாட்களில் முதல்வர், அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
எனவே நேற்றுடன் அனைத்து எம்.எல்.ஏக்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10:40 மணி வரை நீடித்தது.