/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆந்திரா எல்லையில் மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் மீது தாக்கு.. 24 பேர் காயம்: இரு விசைப்படகுகள் பறிமுதல்

ADDED : அக் 07, 2025 07:19 AM

காரைக்கால்: ஆந்திரா எல்லையில் மீன்பிடித்த, காரைக்கால் மீனவர்களை தாக்கி, இரு விசை படகுகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக, இலங்கை போலீசாரால் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
கடற்கொள்ளையர்களும் அடிக்கடி காரைக்கால் மீனவர்களை தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திரா எல்லையில் மீன்பிடித்ததாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசை படகுகளில், கடந்த 3ம் தேதி ஸ்ரீராம், வசந்த், மணிகண்டன், லட்சுமணன், சிலம்பரசன், முத்து, ஆகாஷ், பாபு உள்ளிட்ட 24 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர எல்லையொட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஆந்திரா மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் படகில் ஏறி, அவர்களை சரமாரியாக தாக்கினர். படகில் இருந்த மீன்கள், மொபைல் போன்கள், ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்டவைகளுடன் இரு படகுகளையும் பறித்து சென்றனர். ஆந்திரா எல்லைக்குள் மீன்பிடித்தாக கூறி தாக்கியுள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீசியதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மீனவர்கள், அங்கிருந்த தப்பி, வாகனம் மூலம் நேற்று காரைக்கால் வந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள், ஆந்திரா மீனவர்களால் பறித்து செல்லப்பட்ட இரு விசைப்படகுகளை மீட்டு தருவதுடன், எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்கால் மீனவர்கள், ஆந்திரா மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.