ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை புதுச்சேரியில் பரபரப்பு
ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை புதுச்சேரியில் பரபரப்பு
ADDED : ஆக 31, 2026 07:33 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஆனந்த்,33. ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டின் முன் நின்றிந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை தனியாக அழைத்ததுச் சென்று அவர்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஆனந்தை வெட்ட முயன்றனர். இதனை கண்ட ஆனந்த் அங்கிருந்து தப்பியோடினார். உப்பனாற்றின் மேம்பாலத்தில் சென்றபோது கால் தடுக்கி கீழே விழுந்தார், அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பினர்.
தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்த் மனைவி சரோஜினி புகாரின் பேரில் உளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த் நேற்று முன்தினம் இரவு நடந்த மதுபார் சண்டை காரணமாக கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு கொலை:
கருவடிக்குப்பம் சிங்கம் பார்க்கில் நேற்று காலை சுமார் 45 வயதுள்ள நபர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கு பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் அப்பகுதியில் யாசம் பெற்று, சாராயம் குடித்து வந்தது தெரிந்தது. கொலை குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
