ADDED : செப் 23, 2026 06:02 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆபா எண் பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ‘ஆபா’ 14 இலக்க தனித்துவமான எண் வழங்கப்படுகிறது. ஆபா என்பது ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு ஐ.டி., ஆகும். இது, தனி நபரின் முந்தைய மருத்துவ பரிசோதனை மற்றும் தகவல்களுக்கு காகித கோப்புகளைத் துாக்கிச் செல்லாமல், மருத்துவ வரலாற்றை டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவுகிறது.
குறிப்பாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நிற்காமல் கியூ.ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்து எந்த டாக்டரை பார்க்க வேண்டும் என்பதை முன்பதிவு செய்து கொண்டால், அரசு மருத்துவமனையில் உள்ள தனி வரிசையில் சென்று சீட் பெற்று, எளிதாக டாக்டரை சந்திக்க முடியும்.
இந்த ஆபா கார்டை ஆதார் எண் உதவியுடன் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆஷா பணியாளர்களும் பதிவு செய்த ஆபா எண்களை வழங்கி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
