ஜிப்மரில் ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ மாணவர்களுக்கு விழிப்புணரவு
ஜிப்மரில் ‘நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ மாணவர்களுக்கு விழிப்புணரவு
UPDATED : அக் 12, 2026 07:26 PM
ADDED : அக் 12, 2026 07:22 PM
புதுச்சேரி: கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள அதி நவீன 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் ' தபால் நிலையத்தில் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், தபால் நிலையம் வந்த மாணவர்களை ஊழியர்கள் வரவேற்று, அங்குள்ள நவீன வசதிகளை காண்பித்தனர். உள்ளே வாடிக்கையாளர்கள் அமர்வதற்கான சோபா, வாசிப்பதற்கு நாளிதழ்கள் மற்றும் காபி பிரியர்களுக்கான பிரத்யேக காபி மெஷின் உள்ளிட்ட சிறப்பம்சங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, தபால் துறையின் வரலாறு, பல்வேறு அஞ்சல் தலைகளின் முக்கியத்துவம் மற்றும் அஞ்சலகச் சேவைகள் குறித்து மாணவர்கள் விரிவாகக் கேட்டறிந்தனர்.
இன்றைய டிஜிட்டல் காலத்தில், மாணவர்களுக்குக் கடிதப் போக்குவரத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், அனைவருக்கும் பிரத்யேகமாக போஸ்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில் மாணவர்கள் தங்கள் கைகளாலேயே கடிதங்களை எழுதித் தபாலில் செலுத்தி, ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
