ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்: சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு
ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்: சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு
UPDATED : அக் 12, 2026 07:26 PM
ADDED : அக் 12, 2026 07:22 PM
புதுச்சேரி: ஓட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெரியகடை போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் நவீன்குமார்,மதன்குமார். பிரபல அ.தி.மு.க., பிரமுகரின் மகன்களான இருவரும், புதுச்சேரி, அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உணவகம் நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி இரவு 11.56 மணியளவில், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள மூன்று பேர் விலை உயர்ந்த சொகுசு காரில், சகோதரர்கள் நடத்தி வரும் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.
அங்கு ஓட்டலுக்கு அருகில் உள்ள வீட்டின் எதிரில் காரை நிறுத்தி உள்ளனர். அப்போது ஓட்டலுக்கு வரும் வானங்களை பார்க்கிங் செய்யும் வாலட் டிரைவர்கள் வண்டியை சரியான இடத்தில் பார்க்கிங் செய்ய உதவுவதாக கூறினர். அப்போது அவர்களிடம் காரில் வந்த மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த மதன்குமார் அவர்களை சமாதானம் செய்தார். தொடர்ந்து ஓட்டலுக்குள் வந்த மூவரும் உணவு கேட்டுள்ளனர். அப்போது மதன்குமார் உணவுக்கான ஆர்டர் முடிந்து விட்டது. ஏற்கனவே ஆர்டர் செய்தவர்கள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்
இதனால் ஆத்திரமடைந்த மூவரும்,மொபைல் மூலம் தகவல் தெரிவித்து தனது ஆதரவளார்களை வரவழைத்துள்ளனர். தெடார்ந்து 20க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அப்போது ரகளையில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஓட்டல் மேலாளர் அஜிஷ்,24 என்பவரை அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து தகவல் கிடைத்து வந்த பெரியகடை போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
அரசியல் பெண் பிரபலம் வாக்குவாதம்:
பின் சிறிது நேரம் கழித்து, 17 வயது சிறுவனின் தாயான அரசியல் கட்சி பிரபலம், 30க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து அங்கு போராட்டம் நடத்தப் போவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்தனர். இருதரப்பிடமும் சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர். போலீசார் இரண்டு முறை சமாதனாம் செய்தும், அதிகாலை 2.30 மணிக்கு மதன்குமாரை தொடர்பு கொண்ட பெண் அரசியல் பிரபலத்தின் ஆதரவாளர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மதன்குமார் நேற்று முன்தினம் பெரிய கடை போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் சி.சி.டி.வி., காட்சி ஆய்வு:
புகாரை பெற்றுக் கொண்ட பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆடியோவுடன் கூறிய சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். நேற்று (12ம் தேதி) மாலை வரை வழக்குப் பதிவு செய்யபடவில்லை என கூறினர்.
