/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முழு பயன்பாட்டிற்கு வராத ஆயுஷ் மருத்துவமனை; கை நழுவும் சித்த மருத்துவக் கல்லுாரி?
/
முழு பயன்பாட்டிற்கு வராத ஆயுஷ் மருத்துவமனை; கை நழுவும் சித்த மருத்துவக் கல்லுாரி?
முழு பயன்பாட்டிற்கு வராத ஆயுஷ் மருத்துவமனை; கை நழுவும் சித்த மருத்துவக் கல்லுாரி?
முழு பயன்பாட்டிற்கு வராத ஆயுஷ் மருத்துவமனை; கை நழுவும் சித்த மருத்துவக் கல்லுாரி?
ADDED : மார் 15, 2025 10:25 PM

பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்பப்பட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று வரை முழு பயன்பாட்டிற்கு வராமல் வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையால் சித்த மருத்துவக் கல்லுாரி கை நழுவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுதும் ஆயுஷ் மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரி, வில்லியனுார், கொம்பாக்கம் ரோட்டில் ஏழு கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில், 4,000 சதுரடி பரப்பளவில், தரை தளம் மற்றும் மூன்று மாடிக்கொண்ட கட்டடம் ஆயுஷ் மருத்துவமனைக்காக கட்டப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு ஆக., மாதம் புதுச்சேரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மூ இந்த ஆயுஷ் மருத்துவமனையை ஜிப்மர் வளாகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை முதல் தளத்தில் சித்தா ஆயுர்வேதா பிரிவில் இரு பாலருக்கும் தலா 10 படுக்கை அறைகள், மருந்தகம், ஆய்வக வசதி அமைக்க வேண்டும். இரண்டாவது தளத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே 15 படுக்கை அறைகள் அமைய வேண்டும். மூன்றாவது தளத்தில் கருத்தரங்க கூடம், அலுவலகம், மருத்துவ அதிகாரி அறை ஆகியவை ஏற்படுத்த வேண்டும்.
தரை தளத்தில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை இயங்க வேண்டும். தற்போது தரை தளத்தில் உள்ள பிரிவுகள் மட்டுமே இயங்குகிறது. முதல் தளத்தில் ஒரு அறையில் யோகா பிரிவு மட்டுமே செயல்படுகிறது. மற்ற தளங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகள் மற்றும் எந்த ஒரு உபகரணங்களும் அமைக்கப்படாமல் அறைகள் கடந்த 15 மாதங்களாக பூட்டியே கிடக்கின்றன.
இதற்கு காரணம் ஆயுஷ் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட 65 பணியிடங்களை புதுச்சேரி சுகாதாரத்துறை இதுவரை நிரப்பாததால் இந்த மருத்துவமனையே முழு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
மருத்துவமனை நிலை குறித்து தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த எம்.பி.,கள் பார்லிமெண்டில் கேள்வி எழுப்பியும், பழைய நிலையிலேயே தொடர்கிறது. இந்த மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு வந்தால் தான் புதுச்சேரிக்கு சித்த மருத்துவக் கல்லுாரிக்கான அனுமதியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழங்கும்.
புதுச்சேரி அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆயுஷ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு வராமல் போனதால், புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய சித்த மருத்துவக் கல்லுாரி அனுமதி கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.