கொல்லைப்புற பணி நியமனங்களுக்கு தடை! புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
கொல்லைப்புற பணி நியமனங்களுக்கு தடை! புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
UPDATED : ஜூலை 03, 2026 01:52 PM
ADDED : ஜூலை 02, 2026 06:02 PM

புதுச்சேரி: அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் விதிமுறைகளை மீறி கொல்லைப்புறமாக ஆட்களை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப்புற நியமனம் தொடர்கதையாகி வந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கொடுக்காமல், கட்சிக்காரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு அரசு வேலைகளை வாரி கொடுத்து குஷிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் இந்த கொல்லைப்புற நியமனங்கள் செய்ய தடை விதித்து நிர்வாக சீர்திருத்த துறை அனுப்பியுள்ள அவசர சுற்றிக்கை:
புதுச்சேரியில் பொதுப்பணி நியமனங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், நடைமுறையில் உள்ள பணி விதிகளின்படியும் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதிக்கும் வகையில், விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொல்லைப்புற நியமனங்களையும், நிரந்தரமாக்கலையும் ஏற்க முடியாது என, நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இனி, புதுச்சேரி அரசின் அனைத்துப் பொதுப்பணி நியமனங்களும் முறையாக அறிவிக்கப்பட்ட பணி விதிகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மட்டுமே நடைபெற வேண்டும்.
அரசுப் பணிக்கான நியமனங்கள் அனைத்தும் வழக்கமான காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது. பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளைக் கையாளும் அதிகாரிகள், இந்த நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தனிப்பட்ட பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
முறைகேடான நியமனங்களில் ஈடுபடுவது, உண்மைகளை மறைப்பது அல்லது விதிகளை மீறிச் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும், புதிய நியமனங்கள் தொடர்பான எந்தவொரு கோப்பையும் கையாளும் போது, அரசின் முந்தைய சுற்றறிக்கைகள் மற்றும் இந்த புதிய உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
