ADDED : அக் 25, 2025 07:07 AM
புதுச்சேரி: வங்க கடலில் அடுத்தடுத்து இரண்டு புயல் உருவாக உள்ளதையடுத்து புதுச்சேரியில் பேனர், கட் அவுட் மற்றும் பதாகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களில் அதாவது, நாளை 26ம் தேதி முதல் நவ.,5ம் தேதிக்குள் வங்கக் கடலில் இரண்டு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி அல்லது காற்றழுத்த பகுதி உருவாகக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த பகுதி, ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போது அதி கன மழையுடன் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் எனவும், இதனால், புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலில், பேனர், கட் அவுட், பதாகைகள் காற்றின் தாக்கத்தில் சேதமடைந்து கீழே விழுந்தால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்புப் பாதைகளில் இடையூறு ஏற்படும். மேலும் மின் இணைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால், அனைத்து வித பேனர், கட் அவுட் மற்றும் பதாகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் இன்று (24ம்தேதி) முதல் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

