டிரான்ஸ்பார்மரில் கட்டியுள்ள பேனரால் விபத்து அபாயம்
டிரான்ஸ்பார்மரில் கட்டியுள்ள பேனரால் விபத்து அபாயம்
ADDED : செப் 29, 2026 05:52 PM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமாதா கோவில் அருகே டிரான்ஸ்பார்மரில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கருவடிக்குப்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவிற்காக, கருவடிக்குப்பம் கோமாதா கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் அங்குள்ள மின் கம்பங்களில் ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. விழா முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், டிரான்ஸ்பார்மர் மீது கட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் இதுவரை அகற்றப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ளது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரத்தில், டிஜிட்டல் பேனரால் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவி வருகிறது.
இதுமட்டுமின்றி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலையோரங்கள், சாலை வளைவுகள், போக்குவரத்து சிக்னல்கள், ஹமாஸ் விளக்குகள், மின் கம்பங்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் நகரின் அழகு பாதிக்கப்படுவதுடன், பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவன சிதறல் ஏற்பட்டு, எதிரே வரும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தும் வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக, பொது இடங்கள், சிக்னல்கள், சாலை வளைவுகள், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத பேனர்களை அகற்றவும், விதிகளை மீறி ஆபத்தான முறையில் பேனர் வைப்பவர்கள் மீது போலீசில் புகார் அளித்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
