UPDATED : ஆக 20, 2026 07:57 PM
ADDED : ஆக 20, 2026 07:52 PM
தமிழக - புதுச்சேரி அரசுகள் இடையிலான சொர்ணாவூர் ஒப்பந்தம் தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு டில்லியில் மத்திய நீர் ஆணைய சேர்மன் குஷ்விந்தர் வோஹ்ராவை ஏற்கனவே சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுதொடர்பாக, சட்டசபையிலும் பேசினார்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு கூறும்போது, 'பெண்ணையாற்றின் கடைமுனையில் புதுச்சேரி அமைந்துள்ளது. பெண்ணையாற்றின் தண்ணீர் பங்கீட்டிற்காக 1910ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆங்கிலேய அரசும், பிரெஞ்சு அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் கடைசியாக 2007ல் தமிழக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி புதுச்சேரி மாநிலத்தில் 4,776 ஏக்கர் நிலமும், தமிழ்நாட்டில் 1,275.11 ஏக்கர் நிலமும் உள்ளன. ஒப்பந்தத்தின்படி சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து 9 மாங்களுக்கு தமிழக, புதுச்சேரி ஆயக்கட்டு பகுதிகள் தண்ணீர் பெற வேண்டும். ஆனால், புதுச்சேரி பகுதிக்கு 2 மாதம் வரை தான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் பருவமழை பெய்யும் நவம்பர், டிசம்பரில் தான் பங்காரு வாய்க்கால் வழியாக சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வருகிறது.
சொர்ணாவூர் அணைக்கட்டு பராமரிப்பிற்காக அண்மையில் 46.50 கோடி ரூபாய் தமிழக பொதுப்பணித் துறை கேட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதுச்சேரிக்கு விவசாயத்திற்கு 270 எம்.எல்.டி., குடிநீருக்கு 330 எம்.எல்.டி., என 600 எம்.எல்.டி., தேவைப்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு பெண்ணையாறு ஒப்பந்தப்படி, புதுச்சேரிக்கு தினமும் 600 எம்.எல்.டி., தண்ணீரை 9 மாதங்களில் சாத்தனுார் அணைக்கட்டில் இருந்து பைப் லைன் மூலம் திறந்து விட தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் இந்த கருத்தை வலியுறுத்திய கவர்னருக்கு நன்றி' என்றார்.
