புதுச்சேரி சட்டசபையில் ரூ.14,300 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: எதிர்கட்சிகள் புயலை கிளப்பு முடிவு
புதுச்சேரி சட்டசபையில் ரூ.14,300 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: எதிர்கட்சிகள் புயலை கிளப்பு முடிவு
UPDATED : ஆக 23, 2026 07:41 PM
ADDED : ஆக 23, 2026 07:22 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் காலையில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.மாலையில் முதல்வர் ரங்கசாமி ரூ.14,300 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், மாநிலத்தின் 5 மாத கால அவசர அரசு செலவினங்களை மேற்கொள்வதற்காக ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரியின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவதற்காகச் சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.
அணிவகுப்பு மரியாதை: கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் சட்டசபை வளாகத்திற்கு வருகை தருகிறார். சபையின் முகப்பில் காரில் வந்து இறங்கும் அவரை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் மேடையில் கவர்னர் நிற்க, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருடன் கவர்னர் சபையின் மைய மண்டபத்திற்குள் அழைத்து வரப்படுவார்.
தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டசபை மைய மண்டபத்தில் உள்ள சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்வுகள் முறைப்படி தொடங்கும். அதனைத் தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் தனது உரையை தொடங்குவார்.
தனது உரையில், புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் எட்டப்பட்ட இலக்குகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மற்றும் அரசின் வருங்காலக் கொள்கை முடிவுகள் குறித்து விரிவாக உரையாற்றுகிறார்.
உரை நிறைவு பெற்றதும் சபைக்கு நன்றி தெரிவித்து கவர்னர் விடைபெறுவார். அவரை கார் வரை சென்று தற்காலிக சபாநாயகர் வழியனுப்பி வைக்கிறார்
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: கவர்னர் விடைபெற்ற பின், சபை மீண்டும் கூடி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவு மற்றும் பட்ஜெட் தாக்கல் முன்னேற்பாடுகளுக்காக அன்றைய தின நிகழ்வுகள் மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல்:: மதியம் 3 மணிக்கு சபை மீண்டும் கூடியதும், நிதித்துறையைக் கூடுதல் பொறுப்பாக வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, நடப்பு நிதியாண்டிற்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். எப்போதுமே மக்கள் மீது புதிய வரிகளை விதிக்காமல், வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதை முதல்வர் ரங்கசாமி வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த முறையும் மக்கள் மீது புதிய வரிச்சுமைகள் ஏதும் இல்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்யவுள்ளார்.
எதிர்பார்ப்பு: மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதியறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது:
முதியோர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவித் திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கான புதிய சலுகைகள், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல். தனியார் துறை வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல், சாலைகள், குடிநீர் விநியோகம், சுற்றுலாத் துறை மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு புதிய திட்டங்கள் வெளியாகிறது.
புயலை கிளப்ப முடிவு: சட்டசபையில் மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது குறித்து தி.மு.க., காங்., த.வெ.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. எதிர்கட்சி தலைவர் நாஜிம் தலைமையில் தீவிர ஆலோசனை நடத்தினர். நிரந்தர சபாநாயகர் விவகாரத்தினை சட்டசபையில் புயலை கிளப்ப முடிவு செய்துள்ளனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு: பட்ஜெட்டினையொட்டி சட்டசபை வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கிலான பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபையின் பிரதான நுழைவுவாயிலின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
