ADDED : அக் 17, 2024 12:22 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை, பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் விழா, காமராஜர் நினைவு விழா ஆகியவை வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது.
கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். காமராசர் அறக்கட்டளை நடத்திய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.காமராஜரின் பெயர்த்தி கமலிகா காமராஜர், தமிழ்நாடு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம், ஆசிரியர் சீனுவேணுகோபால் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். புரட்சிக்கவிஞரும் பெருந்தலைவர் காமராஜரும் என்ற தலைப்பில் அறக்கட்டளைத் தலைவரும் பாரதிதாசனின் பேரன் பாரதி உரையாற்றினார்.
விழாவில், பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் காமராஜர் மணிமண்டபத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது. பாரதிதாசன், மன்னர்மன்னன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களுடன் காமராசர் உள்ள படங்கள் மணிமண்டபத்திற்கு வழங்கப்பட்டது.
கமலிகா காமராஜர், தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வாழ்த்திப் பேசினர். காமராஜர் 50ம் ஆண்டு நினைவு விழா ஆண்டு முழுவதும் கல்வி நிறுவனங்களில் நடத்த வேண்டும். கவிஞர் பாரதிதாசன் தொடர்பான ஆவணப்படத்தினை உருவாக்க வேண்டும். தமிழறிஞர் மன்னர்மன்னன் பெயரைக் கல்லுாரிக்குச் சூட்ட வேண்டும். கவிஞர் சித்தன் பெயரில் விருது வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.