ADDED : செப் 01, 2026 11:03 PM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் சிங் பாகேல் கலந்து கொண்டு புதுச்சேரியில் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், மத்திய அரசின் திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் பேசினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், நடக்க உள்ள ‘சேவை உறுதிமொழி இயக்கத்தை’ புதுச்சேரி முழுதும் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மாநில துணைத் தலைவர்கள் பாஸ்கர், ஜெயலட்சுமி, பழனி, ஜெயக்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
