ADDED : மே 19, 2025 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், மத்திய அரசின் செந்துார் ஆப்பரேஷன் நடவடிக்கையை ஆதரித்து ராணுவத்தினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், தேசியக் கொடி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கலந்து கொண்டு பேசுகையில், 'பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து பிரதமர் மோடி ஆபரேஷன் செந்துார் திட்டத்தை துவங்கி, ராணுவம் மூலம் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி, அழித்து வெற்றி பெற்றுள்ளார். பிரதமருக்கும், ராணுவத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் செந்துார் ஆபரேஷன் வெற்றிக்கான கொண்டாட்டமாக தேசியக் கொடி ஏந்திய ஊர்வலம் நடக்கிறது. இதில், கட்சியினருடன், பொதுமக்களையும் பங்கேற்க செய்வது அவசியம்' என்றார்.