/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநிலத் தலைவர் தேர்வில் தொடரும் இழுபறி: வலுவான தலைமையை தேடுகிறது மேலிடம்
/
பா.ஜ., மாநிலத் தலைவர் தேர்வில் தொடரும் இழுபறி: வலுவான தலைமையை தேடுகிறது மேலிடம்
பா.ஜ., மாநிலத் தலைவர் தேர்வில் தொடரும் இழுபறி: வலுவான தலைமையை தேடுகிறது மேலிடம்
பா.ஜ., மாநிலத் தலைவர் தேர்வில் தொடரும் இழுபறி: வலுவான தலைமையை தேடுகிறது மேலிடம்
ADDED : ஜன 28, 2025 06:17 AM

புதுச்சேரி: பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், புதுச்சேரி பா.ஜ., தலைவர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது.
அடுத்தாண்டு நடக்கும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூடுதல் இடங்களை வெற்றி பெறுவதற்காக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியது. 1.5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த நிலையில், அனைத்து அணி தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் மாநில தலைவர் பதவி மட்டுமே அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகின்றது.
கடந்த, 16,17 ஆகிய தேதிகளில் பா.ஜ., மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனாலும் புதிய பா.ஜ., மாநில தலைவர் அறிவிக்கப்படவில்லை.
அடுத்து, இரண்டாவது முறையாக 20, 21 ஆகிய தேதிகளில் பா.ஜ., தலைவர் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில் அதுவும் நடக்கவில்லை. பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்து மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் புதுச்சேரி பா.ஜ., தலைவர்கள் விஷயத்தில் பொறுமையாக ஆராய்ந்து வருகின்றது.
என்ன கணக்கு
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., கட்சியுடன் சேர்ந்து ஆட்சியை பிடித்து இருந்தால் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் சுலபமாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் தோல்வி பா.ஜ.,விற்கு பலத்த அடியாக அமைந்தது. ஆளும் கட்சியாக இருந்தும், என்.ஆர்.காங்., பலத்தோடு போட்டியிட்டும் கூட தோல்வியை தழுவியது கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் மலர்ந்த தாமரை, வரும் சட்டசபை தேர்தலில் வாடிபோய்விடுமோ என்று அனைத்தையும் கணக்கு போட்டு, புதிய தலைவர் விஷயத்தில் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சியை வலுப்படுத்த வலுவான தலைமையை கொண்வரை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என்று டில்லி மேலிடம் தீவிர ஆலோசனை செய்து வருகின்றது.
அதிருப்திகளின் கடிதம்
புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர்கள், மேலிட பார்வையாளர்கள் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி நான்கு பெயர் கொண்ட பட்டியலையும் தேர்வு செய்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி விட்டனர். ஆனால் தற்போதுள்ள பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைவராக தொடர வேண்டும் என்று பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கட்சிக்குள் ஆயிரம் குழப்பம் இருந்தாலும், விமர்சனங்கள் இருந்தாலும், செல்வகணபதி எம்.பி., விஷயத்தில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட ஒற்றுமையாக உள்ளனர். அவர் தலைவராக கடந்தாண்டு தான் பொறுப்பேற்றார்.15 மாதம் தான் உருண்டோடி உள்ளது என்றும் அந்த கடிதத்தில் அழுத்தமாக தெரிவித்துள்ளனர். இதுவும் கட்சி மேலிடத்தை தீவிரமாக யோசித்து வருகின்றது. கட்சியின் விதிமுறையின்படி இரண்டுமுறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். இது தவிர செல்வகணபதி எம்.பி., அந்த வகையில் செல்வகணபதி எம்.பிக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கலாமா என்றும் தீவிரமாக பரீசிலனை செய்து வருகின்றது.
மாற்றமே நிரந்தரம்
மற்றொரு பக்கம், தலைமைக்கு புதிய மாற்றம் தேவை. அதுவே கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் மாநில நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி உயர்த்திய பட்டியலும் உற்றுநோக்கி, பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இந்த பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு பெயர்கள் அடிப்படுகின்றது.
கடைசி அஸ்திரம்
இதற்கிடையில் எந்த பதவியும் இல்லாமல் சும்மாவே இருக்கும் எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் சிலரும் தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். தெரிந்த மத்திய அமைச்சர்களையும் தொடர்ந்து கொண்டு, உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கடைசி கட்ட சிபாரிசு அஸ்திரத்தையும் தெறிவிக்கவிட்டு வலை வீசி வருகின்றனர். இதனால் பா.ஜ., தலைவர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வருகின்றது. இந்த வார இறுதிக்குள் புதிய மாநில தலைவர் யார் என்பதை டில்லி மேடலிடம் அதிகாரபூர்வமாகவே அறிவித்து சஸ்பென்ஸ்யை உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.