/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு; நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
/
ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு; நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு; நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நீட்டிப்பு; நீண்டகால பிரச்னைக்கு தீர்வு
ADDED : நவ 14, 2025 12:14 AM

புதுச்சேரி: ஜிப்மரில் புறநோயாளிகளின் ரத்த பரிசோதனை நேரம் அதிகாலை முதல் மாலை வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதற்காக ஜிப்மர் வளாகத்தில் பொது மருத்துவ பிரிவு, ரத்த வங்கி என இரண்டு இடங்களில் ரத்த பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.
இந்த ரத்த பரிசோதனை மையங்களின் பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மரில் வழக்கமாக காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 2:00 முதல் 3:00 மணி வரையும் ரத்த பரிசோதனை செய்யப்படும். இதேபோல் சனிக்கிழமைகளில் காலை 8:30 முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும்.
புதிய அட்டவனைப்படி ஜிப்மர் ரத்த பரிசோதனை மையங்கள், இனி உணவு இடை வெளி நீங்கலாக காலை 6:30 முதல் மாலை 5:00 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 6:30 முதல் மதியம் 2:00 மணி வரையும் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில், 'இந்த கால நேர நீட்டிப்பு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்யவும், அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் உதவும். உடனே பரிசோதனை முடிவுகளை பெற வழிவகுக்கும். இந்த முயற்சி நோய் கண்டறிதல் சேவைகளை மேம்படுத்துவதோடு, நோயாளிகளின் நோய் சிகிச்சை குறித்த திருப்திகரமான மனநிலையை ஏற்படுத்தும்.
காலை 6:30 மணிக்கு ரத்த பரிசோதனைகள் செய்வதன் மூலம் உணவு இல்லாமல் வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை தேவைபடும் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும். மூத்த குடிமக்கள், பெண்கள், நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருக்கும் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
ஜிப்மரில் ஆண்டிற்கு சராசரியாக 14,56,684 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் பழைய நோயாளிகள் 11,97,980 பேரும், புதிய நோயாளிகள் 2,45,664 பேரும் அடங்குவர்.
இவர்களின் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் ரத்த பரிசோதனை அவசியம் தேவைப்படுகிறது.
ஜிப்மரில் ஆண்டிற்கு லட்சக்கணக்கில் ரத்த பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு இதுவரை 85,78,421 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு சராசரியாக 7,14,868 பேருக்கும், தினமும் 23,828 பேருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த காலக்கெடு நீட்டிப்பு நோயாளிகளின் காத்திருப்பு சிரமங்களை குறைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பிரச்னைக்கு தீர்வு ஜிப்மரில் சனிக்கிழமைதோறும் காலை 8:30 முதல் 11:00 மணி வரை மட்டுமே ஏற்கனவே ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அன்றைய தினம் சாப்பிடுவதற்கு, முன் - பின் நேரங்களில் பரிசோதனை செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.
இதனால், சனிக்கிழமை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வது தவிர்க்கப்பட்டது. தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காலை 6:30 மணி முதல் ரத்த பரிசோதனை செய்யப்பட உள்ளது.

