ADDED : ஆக 17, 2026 07:32 PM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையின் உடற்கூறியல் துறை சார்பில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜவகர் நகரில் நடந்த நிகழ்ச்சியில், உடல் தானத்தின் அவசியம், தானம் செய்வதற்கான நடைமுறைகள், தகுதி விதிமுறைகள் மற்றும் பதிவு செய்யும் முறை குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டன.
மேலும், உடல் தானம் தொடர்பாக மக்களிடையே நிலவும் தவறான கருத்துகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
ஜிப்மர் உடற்கூறியல் துறையின் தலைவர் சரசு பேசும்போது, ‘உடல் தானம் என்பது மருத்துவ கல்விக்கும் அறிவியலின் முன்னேற்றத்திற்கும் செய்யப்படும் உயரிய மனிதநேயப் பங்களிப்பாகும். சமுதாயத்தில் இது குறித்து ஜிப்மர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
உடல் தானம் செய்ய விருப்பமுள்ள பொதுமக்கள், தகுந்த வழிகாட்டுதல்களைப் பெற ஜிப்மர் உடற்கூறியல் துறையை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்’ என குறிப்பிட்டார்,
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் உடற்கூறியல் துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, மருத்துவ மாணவர்கள் மற்றும் எதிர்கால மருத்துவர்களின் பயிற்சிக்கு மனித உடல்கள் எவ்வாறு முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை விளக்கினர்.
