/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
/
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 30, 2025 07:33 AM

புதுச்சேரி; புதுச்சேரியில், முதல்வர் வீடு மற்றும் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் சமீப காலமாக மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. உச்சபட்சமாக கடந்த 14ம் தேதி கவர்னர் மாளிகைக்கும், 19ம் தேதி முதல்வர் ரங்கசாமி வீடு மற்றும் 4, நட்சத்திர ஓட்டல்களுக்கு மிரட்டல் வந்தது. சோதனையில் அனைத்தும், புரளி என தெரியவந்தது.
இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், இ-மெயில் 'டார்க் நெட்' வழியே வந்துள்ளதால், மர்ம நபரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
அடுத்து, கடந்த 23ம் தேதி மீண்டும் கவர்னர் மாளிகைக்கும், 25ம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் வந்தது. அதில், ஜிப்மர் மருத்துவமனை, திலாஸ்பேட்டை வீமன் நகரில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீடு, அருகில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில், தலைமை செயலகம் அருகே உள்ள பிரெஞ்சு துாதரகம் மற்றும் புதுச்சேரி முல்லா வீதியில் அமைந்துள்ள குத்பா பள்ளி வாசல்களில் மதியம் 2:00 மணிக்கு ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு வெடிக்கும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலையில், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர், செந்தில்குமார் தலைமையில், கோரிமேடு, பெரியக்கடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் குழுவினர் உதவியுடன் காலை 10:45 மணி முதல் பகல் 1:00 வரை சோதனை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், போலீசார் நிம்மதியடைந்தனர்.
இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதிகளில் சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் ஏதேனும் கண்டால் உடன் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஒரே நாளில் முதல்வர் வீடு உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்த விசாரணையை சைபர் கிரைம் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.