/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
புதுச்சேரி கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூலை 22, 2025 07:28 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, ஜிப்மர் மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், கலெக்டர் அலுவலகங்களுக்கு அவ்வப்போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து, புரளி என்பதை உறுதி செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்தனர். அதில், மர்ம நபர் 'டார்க் நெட்' மூலம் மெயில் அனுப்பப்பட்டு வந்ததால், மர்ம நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார், விழி பிதுங்கி வந்தனர். கடந்த 2 மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வராததால் போலீசார் சற்று நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்த இ-மெயில்களின் ஒன்றில், கோர்ட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், முதன்மை நீதிபதி மற்றும் உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கோர்ட் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கோர்ட் வளாகம் முழுதும் சோதனையிட்டனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில், வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர் குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.