/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மெக்கானிக் வருகைக்காக காத்திருக்கும் தாவரவியல் பூங்கா சிறுவர் உல்லாச ரயில்
/
மெக்கானிக் வருகைக்காக காத்திருக்கும் தாவரவியல் பூங்கா சிறுவர் உல்லாச ரயில்
மெக்கானிக் வருகைக்காக காத்திருக்கும் தாவரவியல் பூங்கா சிறுவர் உல்லாச ரயில்
மெக்கானிக் வருகைக்காக காத்திருக்கும் தாவரவியல் பூங்கா சிறுவர் உல்லாச ரயில்
ADDED : நவ 02, 2025 03:48 AM
பு துச்சேரி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக 1974ம் ஆண்டு முதல் சிறுவர் உல்லாச ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பூங்காவில் ஜெகஜீவன் ராம், ரோஸ்வில் நகர் என, இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே டீசல் என்ஜினை கொண்ட இந்த சிறுவர் ரயில் 50 ஆண்டுகள் இயங்கியது.
இந்நிலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.13 கோடி செலவில் சுதேசி மில் வளாகம் மற்றும் தாவரவியல் பூங்காவை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதில் பூங்காவை சுற்றி பார்க்கும் வசதிக்காக நான்கு பேட்டரி கார்களும் மற்றும் ரூ.1.50 கோடி செலவில் புதிதாக பேட்டரியில் இயங்கும் ஒரு சிறுவர் உல்லாச ரயிலும் வாங்கப்பட்டது. நான்கு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 48 பேர் அமர்ந்து பயணிக்க முடியும்.
மின்சாரத்தை ரீசார்ஜ் செய்து முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்த சிறுவர் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டு, தாவரவியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. பழைய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு, இந்த ரயிலுக்காக புதிய தண்டவாளங்கள் 1.5 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. பூட்டியே கிடந்த பூங்கா நீண்ட இழுபறிக்கு பின்பு கடந்த 27ம் தேதி திறக்கப்பட்டு, பேட்டரி கார்கள், சிறுவர் உல்லாச ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திறப்பு விழா அன்றே சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பூங்காவை சுற்றி வந்த ரயில் 'குகைப்பகுதியை' கடந்தபோது, தண்டவாளத்தில் ஏற்பட்ட மக்காரால் ரயில் கடந்து செல்ல முடியாமல் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக ரயில் இயக்குவதை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து ரயிலை விற்ற நிறுவனத்தின் மெக்கானிக் வருகைக்காக, ரயிலை ெஷட்டில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.
ஐம்பது ஆண்டிற்கு முன் வாங்கப்பட்ட டீசல் இன்ஜின் ரயில் கம்பீரமாக ஜெகஜீவன் ராம் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும்போது ரூ.1.50 கோடி செலவில் வாங்கப்பட்ட ரயில் முழு பயன்பாட்டிற்கு வரும் முன்பே பழுதாகி நிற்பதால் பல்வேறு சந்தேகங்களை பூங்கா ஊழியர்கள் எழுப்புகின்றனர்.

