/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியின் பெருமையை சொல்லும் ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகை அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
/
புதுச்சேரியின் பெருமையை சொல்லும் ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகை அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியின் பெருமையை சொல்லும் ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகை அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
புதுச்சேரியின் பெருமையை சொல்லும் ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகை அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
ADDED : நவ 02, 2025 03:49 AM

பு துச்சேரியின் இதயத்தில், ரங்கப்பிள்ளை வீதியின் வீட்டு எண் 35-ல் நிமிர்ந்து நிற்கிறது கம்பீரமான அந்த மாளிகை. அது வெறும் கட்டடம் மட்டுமல்ல, புதுச்சேரியின் வரலாற்றை உயிரோடு பேசும் மவுன சாட்சி.
அது தான் நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கப் பிள்ளை மாளிகை. கடந்த மூன்று நுாற்றாண்டுகளாக புதுச்சேரியின் புகழை நிழல்போல் தாங்கி நிற்கும் அதிசயம்.
வரலாற்றின் வாசம். 1735-ம் ஆண்டில் எழுந்த இந்த இருமாடி மாளிகை, பாரம்பரியம் மற்றும் புது நாகரிகம் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்திருக்கும் கலாசார சிற்பம். தரைத்தளத்தில் தமிழரின் திண்ணை, தாழ்வாரம், வாசல், குறடு, நடை, முற்றம் என ஒவ்வொரு அங்குலமும் பழமையான நம் பாரம்பரிய மணத்தை வீசுகிறது. அந்த திண்ணையில் நின்றால், தாத்தா பாட்டிகளின் காலம் உயிர் பெறுவது போல இருக்கின்றது.
பாரம்பரியத்தின் அழகு முற்றத்தை சுற்றி வட்டமாக நிற்கும் தேக்கு மரத்துாண்கள், ஒவ்வொன்றும் நுட்பமான மரச்சிற்பக் கலைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. மண்ணின் மணம் கலந்த தாழ்வாரம், தெய்வத்தின் முன்னிலையில் அமைந்த பூஜை அறை, நடுவில் ஒளி பாயும் முற்றம். இவை எல்லாம் ஒன்றிணைந்து தமிழரின் இதயத்தை பிரதிபலிக்கின்றன.
மேல் மாடியின் மாயம் அந்த மரப்படிக்கட்டில் ஏறிச் சென்றால், ஒரே ஆச்சரியம். அங்கு பிரெஞ்சுப் பாணி செழுமையும் ஐரோப்பிய கலைநயமும் விரிகின்றன. சுண்ணாம்பு செங்கல் சுவர்கள், உயர்ந்த சாளரங்கள், மரச்சட்டக் கதவுகள், கலைநயமான கைப்பிடி தடுப்புகள் ஒவ்வொன்றும் அரசகுமாரர் அரண்மனையைப் போலப் பிரமிப்பை உண்டாக்குகின்றன. அந்த வண்ணமயமான விளக்குகளின் ஒளியில் மாளிகை ஒவ்வொரு இரவும் புதுச்சேரியின் முத்துப் பாறையாக ஜொலிக்கிறது.
வரலாற்றின் உயிர்த்தெழுச்சி அடுத்து மேல் மாடியில் அமைந்துள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் தனியறை. அங்கே நுழையும் போது நேரம் நின்றுவிடுகிறது. அவரின் வாள், இடுப்புக்கத்தி, குடை ஒவ்வொன்றும் 18ம் நுாற்றாண்டின் பிரெஞ்சு கால வரலாற்றை உயிரோடு நம் கண்முன்னே கொண்டு வருகின்றன.
அந்த அறை, அந்த மரக்கதவு, அந்த நிழல் அனைத்தும் நான் ஆனந்தரங்கப்பிள்ளை” என்று சொல்லும் மவுன ஒலியாக மனதைக் கவர்கின்றன.
புதுச்சேரியின் பெருமை இந்த மாளிகை ஒரு கட்டடம் அல்ல. அது ஒரு வரலாற்றின் துடிப்பும், பாரம்பரியத்தின் உயிரும். தமிழர் கலையும், பிரெஞ்சு பண்பும் கலந்து உருவான கலாசாரக் காவியம் இது. புதுச்சேரியின் ஒவ்வொரு மூலையும் நவீனத்தின் வெளிச்சத்தில் மிளிர்கையில், ஆனந்தரங்கப்பிள்ளை மாளிகை நம் கலாசாரத்தையும். ஐரோப்பிய கலாசாரத்தையும் ஒன்று சேர நினைவூட்டும் நிழலாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த மாளிகை, காலத்தைக் கடந்து நிற்கும் பெருமைச் சின்னம்.

